அன்று சனிக்கிழமை. எம்பெருமானுக்கு உகந்த நாள்.
எனக்கு விடுமுறை ஆதலால் நான் என் குடும்பத்தாருடன் என் தங்கையின் புகுந்த ஊரான "தென்னாங்கூர்"க்கு செல்லலாம் என்று தீர்மானித்து ஆயத்தமானோம்.
முதலில் தென்னாங்கூர் பற்றிய சிறு விளக்கம். தென்னாங்கூர் ஒரு தஷிணஸ்தலம். சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி போகும் மார்க்கத்தில் உள்ளது. சுமார் 90 கிலோமீட்டர். அதில் ஆட்சி செய்பவர் எம்பெருமான் பாண்டுரங்கன், எம்பிராட்டி ரகுமாயி. ஞானானந்தகிரி ஸ்வாமிகளால் நிர்மானிக்கப்பட்ட கோயில். பூரி ஜகந்நாதர் கோயில் போன்ற ராஜகோபுரம், கண்ணாடி இழைகளால் செய்த சிற்பங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம். சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம்.
"கூப்பிடு வண்டி" 11 மணிக்கு சொல்லியாகிவிட்டது. சாதாரணமாக நாங்கள் கோயம்பேடு போய் அங்கிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி போகும் பேருந்தில் ஏறி தென்னாங்கூரில் இறங்குவோம்.
வேண்டிய பொருள்களை எடுத்து வைத்தாயிற்று. இனி சாப்பிட்டுவிட்டு கிளம்ப வேண்டியதுதான். மணி அப்பொழுது காலை 10.00. சாப்பிட உட்காரும்பொழுது எனது தந்தை "என் கையில் போட்டிருந்த மோதிரத்தை எங்கே வைத்தேன்!!" என்று ஆரம்பித்தார். நான் "எப்பொழுதும் கழற்றி வைக்கும் பூஜையறையில் தான் வைத்திருப்பீர்கள்" என்று சாதரணமாகக் கூறினேன். அங்கேயும் இல்லை என்றார். ஆரம்பமானது குழப்பம். அனைத்து இடத்திலும் தேடல் வேட்டை ஆரம்பமானது. கிடைத்தபாடில்லை. மணியோ 10.30 ஆகிவிட்டது. தந்தை புலம்ப ஆரம்பித்துவிட்டார். நன்றாக வெய்யில் அடித்துக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று மழைமேகம் சூழ்ந்தால் எப்படி இருளடிக்குமோ அப்படி ஆனது எங்கள் நிலை. ஏனென்றால் அது நான் கஷ்டப்பட்டு துபாயில் இருக்கும்பொழுது என் அப்பாவுக்காக வாங்கிவந்தது. அதனால் என் அப்பா மிகவும் நொந்து போய்விட்டார். ஆனால், என் மனம் மட்டும் சற்றும் கலங்கவில்லை. அது "என் உழைப்பு உண்மையான உழைப்பு என்றால் அது நம் கைக்கு தானாக வந்துவிடும் என்று வினவியது".
எது எப்படியோ பயணத்தை ரத்து பண்ணாமல் போய்வந்துவிடலாம் என்று தீர்மானித்து சாப்பிட உட்கார்ந்தோம். சாப்பாடு சுத்தமாக செல்லவில்லை. கூப்பிடு வண்டியும் வந்தாயிற்று. இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு கிளம்பினோம்.
என் தந்தை அதே வண்டியில் தென்னாங்கூரே சென்றுவிடலாம் என்று சொன்னதால் அதன்படி வண்டியை நேராக தென்னாங்கூர் விடச்சொன்னேன்.
சாதாரணமாக செங்கல்பட்டை அடுத்து பெப்சி தொழிற்சாலை தாண்டியவுடன் ஒரு சாலை பிரியும். அதுதான் வந்தவாசி செல்லும் சாலை. ஓட்டுநர் அந்த சாலையில் செல்லாமல் நேராக சென்றுவிட்டார். அப்படிச் சென்றால் மேல்மருவத்தூர் சென்று, வந்தவாசி போய்தான் வரவேண்டும். என்ன செய்வது?? அப்படியே செல்லச்சொன்னேன். அந்த மனநிலையில் வழிநிலை தெரியவில்லை.
வண்டி மேல்மருவத்தூர் அடைந்தவுடன் என் தந்தை மேல்மருவத்தூர் சக்தியிடம் ஒரு வேண்டுதல் வைத்தார்; "மோதிரம் கிடைத்தால் அங்கு வந்து சக்தியை வணங்குகிறேன்" என்று.
பின்னர் மதியம் 2.30 மணி வாக்கில் தென்னாங்கூர் சென்றடைந்தோம். என் தந்தை புலம்பல் தீரவில்லை. அந்த சோகம் என் தங்கை வீட்டாரையும் ஆட்கொண்டது.
என் உள்ளுணர்வு மட்டும் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. மாலை ஆனவுடன் எம்பெருமானை தரிசிக்க சென்றேன். துளசி வாங்கிப்போட்டேன். சனிக்கிழமை ஆதலால் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் ஜொலித்தார் பாண்டுரங்கன்.
நான் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தேன். "என் உழைப்பு உண்மையான உழைப்பு என்றால் மோதிரம் எம் கைகளில் தானாக வரும்படி செய்வாய்" என்று. அவ்வளவு தான். நான் மற்றவர்கள் மாதிரி அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வேண்டவில்லை.
வீடு திரும்பினேன். என் தந்தை இன்னமும் புலம்பிக்கொண்டிருந்தார். நான் எம்பெருமானிடம் சொன்னதையையே அவரிடம் சொல்லி சமாதானப்படுத்திவிட்டு சாப்பிட்டுவிட்டு சற்றுநேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று என் தந்தையின் கூக்குரல். போய்ப்பார்த்தால் "ஆச்சர்யம்". மோதிரம் கிடைத்துவிட்டது. தான் எப்பொழுதும் சாப்பிடும் மருந்து உறைக்குள்ளிருந்து மருந்து எடுக்கும் பொழுது கையில் கிடைத்தது. என் தந்தையின் முகத்தில் அலர்ப்பறியா ஆனந்தம், மகிழ்ச்சி. என் மனம் பாண்டுரங்கனுக்கு நன்றி சொல்லியது. மோதிரம் கிடைத்ததற்காக அல்ல. என் உழைப்பிற்கு அவர் அளித்த சான்றிதழ் போல் எனக்குத் தோன்றியது.
ஆகவே, அன்பர்களே!!
உண்மையாக உழையுங்கள்!! உழைப்பு வீண்போகாது!! உழைப்பில் நாம் வாங்கும் பொருளும் நம் கையை விட்டு என்றும் அகலாது!!
உண்மை! உழைப்பு! உயர்வு!
என்பவருக்கு ஏது அயர்வு!
நன்றி! வணக்கம்!
என்றும் அன்புடன்
சத்யநாராயணன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment