Thursday, August 19, 2010

சுவாமியே ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!


ச‌ப‌ரிம‌லை வாச‌னே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

ஹ‌ரிஹ‌ர‌ புத்திர‌னே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

‌பந்தள‌‌ ராஜகுமாரனே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

வெள்ளாள‌ர்குல‌ ஜாத‌னே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

மெய்வடிவான ஐயனே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

நெய்ய‌பிஷேக‌ப் பிரிய‌னே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

(மகர)ஜோதிர் மயமானவ‌னே!
ச‌ர‌ண‌ம் ஐய‌ப்பா!

வாவ‌ர்சாமி வேந்த‌னே!
சரணம் ஐயப்பா!

யாவ‌ரையும் காப்ப‌வ‌னே!
த‌ர்மசாஸ்தா ஐய‌ப்பா!

‍--ச‌த்யா--

முதல்வன் முருகன்!!


அழகெனும் சொல்லுக்கு
அகர‌மாய் விளங்கும் சிங்காரவேல‌‌னே!

செம்மொழியாம் செந்தமிழுக்கு
அடைமொழியாம் உமை மைந்தனே!

அப்பனுக்கும் பாடம் சொன்ன‌
வேழ‌முகத்தான் சோதரனே!

வள்ளித் தெய்வானை மணாள‌னே!
அல்லல் போக்கும் அருளாளனே!

பிரணவத்தின் அரணாம் மணிய‌னே!
அரவத்தையும் ஆட்கொள்ளும் சண்முகனே!

குன்றத்தில் குடிகொண்ட குறிஞ்சி நாயகனே!
செந்தூரில் நின்றருளும் செந்தில்நாதனே!

பழநிப்பதி வாழ் பாலகுமர‌னே!
(சுவாமி)மலைதனில் வாசம்செயும் சுவாமிநாதனே!

தணிகையில் திகழும் தணிகாசலனே!
சோலைமலையில் சோதிமயமான வேலவனே!

மருதத்தில் மணம்பரப்பும் மாமணியே! என்றும்
இருதயத்தில் இத(ட)ம‌ளிப்பாய் மால்மருக‌னே!

-‍‍சத்யா-

Wednesday, August 18, 2010

அன்னை - மக‌ன் உண‌ர்வுக‌ள்

அன்னையின் உண‌ர்வுக‌ள்

மகனே!

உதிரத்தில் உதித்த முத்தே!

உன் உதிரம் உதிர்த்து

எங்கள் பசியாற்ற‌ இன்று

பணியாற்றச் சென்றுள்ளாயே!

எழுதுகோல் பிடித்த கரங்களால்

எந்திரம் பிடிக்கச் சென்ற‌வனே!

ப‌ணி இடையில் ப‌சியும் ஆறினாயோ? அல்ல‌து

ப‌சி பொறுத்து ப‌ணி ஆற்றுகிறாயோ?

மகனின் உணர்வுகள்

தொடங்கிவிட்டது வாழ்க்கைப் பயணம்..

ஓடுகின்ற ரயிலோடு

ஓடுகின்றது நினைவுகளும் ...

தங்கையின் கல்யாணம்..

அக்காவுக்கு வீடு..

அப்பாவுக்கு மருத்துவம்

அடடடா இன்னும் எவ்வளவோ ..

எண்ணங்கள் ஓடுகையிலே ரயில் நின்றுவிடுகிறது தரிப்பிடத்திலே எண்ணங்களின் ஓட்டங்களோ இன்னும் நிற்கவில்லை ...

புதிய வேலை..புதிய சூழ்நிலை..புதிய மனிதர்கள்..புதிய பரிணாமம்.. மொத்தத்தில் புதிய உலகம்..

என் திறன் கொண்டு

எந்திரம் தனில் வேலைதனை தொடங்கையிலே ..

வெறுக்க வைக்கிறான் வெளிநாட்டவன் ..

நெடுநேர சங்கின் ஒலி..

மதிய உணவு இடைவெளியாம்!

பாசத்தில் பரிமாறும்

அம்மாவின் உணவில் குறை கண்டோமே!

இன்று குறைந்தாலும் குறையிருந்தாலும்

நிறை காணவேண்டுமே!

மறுபடியும் வேலை ...

மறைகின்றது எண்ணங்கள் ...

மறக்காவிட்டால் மறக்க வேண்டிவரும்

வேலையை ..உண்பதற்கு.

மாலை..

மீண்டும் வாழ்க்கைரயில் பயணம்..

---சத்யா---

பாச‌த்தில் ப‌றித‌விக்கும் பாச‌ம‌லர்

அன்னை

செல்ல மகளே!

என் அன்புக்கு பரிசாக
இந்த பூமியில் பிறந்தவள் நீ!

பட்டம் விட்டு
பட்டம் பயின்ற
பட்டாம் பூச்சியே!

குடும்பச் சுமை குறைய
நிறுவனம் தனில் நிலைகொள்ள‌
தொடங்கிவிட்டது உன்
அத்தியாயம் இரண்டு!

ஈறைந்து மாதம் கடந்து
ஈன்றெடுத்த வேளையில்
உணராத வலி, இன்று
உணர வைக்கிறது!

மாசிலாம‌ணியே!

சுழலும் பூமிதனில்
இரையும் புகையால்
இழைந்தோடும் சுற்றுச்சுழ‌ல் போல்,

உன் சில்லரை சிரிப்பும்
சிதைந்து போகுமோ!

உன் திருமுகமும்
க‌ருமேக‌மென மாறி விடுமோ!

திற‌மடை போல் திர‌ண்டு வ‌ரும்
வாக‌ன‌ப்படை எதிர்கொள்ளும் சக்தியே!

உன் வ‌ருகையில்
நொடிப்பொழுது தாம‌தமும்
என் நெஞ்சைப் பொடிப்பொடி ஆக்குமே!

பாசத்தில் பசியாறும் பாச மலரே! இன்று
பசி ஆறினாயோ! அல்லேல்
பசி பொறுத்து பணி ஆற்றுகிறாயோ??

மகள்

தேவதைகள் தேவை இல்லை
என் அன்னை வரம் தருவாள்!

நெஞ்சில் முகம் தாழ்த்தி
என் இதய ஒலி கேட்பாள் !

தன் விழி மூடி கண் அயர்வாள்
என் விழி துயில்கையில்!

அவள் புகைப்பட நகலில்
இவள் அசல்முகம் தோன்றும் !

அவள் விரல்பிடித்து வீதி செல்கையில்,
என் பெருமை பறைசாற்ற இன்றில்லை வள்ளுவனும் !

அன்னையின் அரவணைப்பில்
சிட்டுக்குருவி சுதந்திரம் பறிபோய்
எந்திரம் ஆனதே வாழ்க்கை!

பசித்தால் சோறு போய், மணி
அடித்தால் சோறு ஆயிற்றே!

தன் பசி பொறுத்து
என் பசி ஆற்றுவாளே அன்னை!

இன்று ப‌சி ஆறினாளோ அல்லேல்
நினைவால் ஆற்றுகிறாளோ........?.....

---சத்யா---