Wednesday, August 18, 2010

பாச‌த்தில் ப‌றித‌விக்கும் பாச‌ம‌லர்

அன்னை

செல்ல மகளே!

என் அன்புக்கு பரிசாக
இந்த பூமியில் பிறந்தவள் நீ!

பட்டம் விட்டு
பட்டம் பயின்ற
பட்டாம் பூச்சியே!

குடும்பச் சுமை குறைய
நிறுவனம் தனில் நிலைகொள்ள‌
தொடங்கிவிட்டது உன்
அத்தியாயம் இரண்டு!

ஈறைந்து மாதம் கடந்து
ஈன்றெடுத்த வேளையில்
உணராத வலி, இன்று
உணர வைக்கிறது!

மாசிலாம‌ணியே!

சுழலும் பூமிதனில்
இரையும் புகையால்
இழைந்தோடும் சுற்றுச்சுழ‌ல் போல்,

உன் சில்லரை சிரிப்பும்
சிதைந்து போகுமோ!

உன் திருமுகமும்
க‌ருமேக‌மென மாறி விடுமோ!

திற‌மடை போல் திர‌ண்டு வ‌ரும்
வாக‌ன‌ப்படை எதிர்கொள்ளும் சக்தியே!

உன் வ‌ருகையில்
நொடிப்பொழுது தாம‌தமும்
என் நெஞ்சைப் பொடிப்பொடி ஆக்குமே!

பாசத்தில் பசியாறும் பாச மலரே! இன்று
பசி ஆறினாயோ! அல்லேல்
பசி பொறுத்து பணி ஆற்றுகிறாயோ??

மகள்

தேவதைகள் தேவை இல்லை
என் அன்னை வரம் தருவாள்!

நெஞ்சில் முகம் தாழ்த்தி
என் இதய ஒலி கேட்பாள் !

தன் விழி மூடி கண் அயர்வாள்
என் விழி துயில்கையில்!

அவள் புகைப்பட நகலில்
இவள் அசல்முகம் தோன்றும் !

அவள் விரல்பிடித்து வீதி செல்கையில்,
என் பெருமை பறைசாற்ற இன்றில்லை வள்ளுவனும் !

அன்னையின் அரவணைப்பில்
சிட்டுக்குருவி சுதந்திரம் பறிபோய்
எந்திரம் ஆனதே வாழ்க்கை!

பசித்தால் சோறு போய், மணி
அடித்தால் சோறு ஆயிற்றே!

தன் பசி பொறுத்து
என் பசி ஆற்றுவாளே அன்னை!

இன்று ப‌சி ஆறினாளோ அல்லேல்
நினைவால் ஆற்றுகிறாளோ........?.....

---சத்யா---

No comments: